"மேடம், இங்க பாருங்க.. ப்ளீஸ் ஒரேயொரு புகைப்படம்!" | வாக்களித்த கனிமொழி எம்.பி
கனிமொழி வாக்களிப்பதில் என்ன விஷேசம்? பிரபலமான அரசியல்வாதியென்பதாலா அல்லது கரோனா தொற்றுக்குள்ளானவர் என்பதாலா?
'Breaking News' பிரிவைச் சேராத ஒரு செய்தியாளர் சொல்லும் செய்தி இது!
'ஊடகத்துறையை நம்புகிறீர்களா?' என்று நான் உங்களிடம் கேட்டால் நீங்கள் அனேகமாக 'இல்லை' என்று பதிலளிப்பீர்கள். அதற்காக நான் உங்களைக் குறை சொல்லமாட்டேன்.
இன்று ஏப்ரல் 6, 2020. அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தலை தமிழகம் எதிர்கொள்கிறது. அனைத்து செய்தித் தொலைக்காட்சி ஊடகங்களும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கூடியிருக்கின்றன.

நேரம் மாலை 6.15.
புகைப்படக்கலைஞர்கள் அனைவரும் தயார் நிலையில் நிற்கிறார்கள். அவர்களின் விரல்கள் ஷட்டர் பட்டன் மேல் வட்டமிட்டபடி இருக்கின்றன. எதற்காக? கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள திமுக எம்பி கனிமொழி ஆம்புலன்ஸில் வந்து தனது வாக்கைப் பதிவுசெய்ய உள்ளார்.
அவர் ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறங்கியதும் அங்கிருக்கும் புகைப்படக்கலைஞர்களும் ஒளிப்பதிவாளர்களும் ஒரு நல்ல ஷாட் எடுக்க அவரைச் சூழ்ந்துகொள்கிறார்கள். நான் திரும்பவும் சொல்கிறேன், கனிமொழி எம்பி கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
PPE கிட் அணிந்தவர்கள் மட்டும் கனிமொழி வாக்களிக்கும் பூத்திற்குள் செல்ல முடியும் என இதற்கு அரை மணி நேரம் முன்பு தான் காவல்துறையினரும் ஊடகத்தினரும் ஒரு ஓப்புதலுக்குள்ளானார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை.

கனிமொழி வாக்களிக்கச் செல்லும் வகுப்பிற்குள் நுழைவதற்கு நெருக்கியடித்துக் கொண்டிருந்தனர். முந்திச்செல்ல முடியாதவர்கள் வெளியிலேயே மாட்டிக்கொண்டனர். ஆனால் அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை! வகுப்பின் ஜன்னல் திண்டின்மேல் ஏறியபடி கம்பிகளுக்கிடையில் கேமரா லென்சை வைத்து அவரை ஃப்ரேமில் கொண்டு வந்து விட சிரமப்பட்டனர்.
”மேடம், ப்ளீஸ்… ப்ளீஸ் பொறுமையா.”
”மேடம், இங்க பாருங்க.. இங்க பாருங்க. ஒரேயொரு ஷாட்.”
வீடியோகிராபர்கள் கனிமொழியை காட்சிப்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், சில செய்தியாளர்கள் கனிமொழியின் முகக்கவசத்திலேயே நேரடியாக மைக்கை நீட்டி அவரது கருத்தைக்கேட்டனர்.
இவை நடந்துகொண்டிருக்கும் போது போலிஸ்காரர்கள் எங்கு சென்றிருந்தார்கள்? கூட்ட நெருக்கடியில் அவர்களது கூக்குரலை யாராலும் கேட்க முடியவில்லை.

நான் ஒரு போலிஸ்காரரின் முகத்தைப் பார்க்க நேர்ந்தது. அவர் அந்த நெரிசலைக் கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தார். எந்தவொரு முன்னேற்பாடும் உத்திரவாதமும் கூட இப்படியான கட்டுப்பாடற்ற நெரிசலை சமாளிக்க உதவியிருக்காது என்று கண்டிப்பாக கூறலாம்.
‘‘தொலைக்காட்சி ஊடகங்கள் புகைப்படக் கலைஞர்கள் மீது கொடுக்கும் அழுத்தம் தான் காரணம். உடனடித்தன்மையும் செய்தியின் மதிப்பும் மிக முக்கியம். கனிமொழி வாக்குசாவடியை விட்டு வெளியேறிய நொடி அந்த செய்தி மக்களின் தொலைக்காட்சியிலிருந்தும் வெளியேறிவிடுகிறது,” என ஒரு புகைப்படக் கலைஞர் கூறினார்.

ஆனால் கனிமொழி வாக்களிப்பதில் என்ன சிறப்பு? அவர் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருப்பதாலா அல்லது அவருக்கு கரோனா தொற்று இருப்பதாலா?
இரண்டும் தான். தமிழக அரசியலில் ஒரு பிரபலம் தனக்கு கரோனா தொற்று இருப்பின், நான் வாக்கு பதிவு செய்வேன் என அறிவித்தது முக்கியம் தான். என்ன ஆனாலும் பரவாயில்லை நான் வாக்களிப்பேன் என உலகிற்கு கூறுவது போல உள்ளது”, என ஒரு செய்தியாளர் கூறினார்.

சைக்கிள்களில் பயணம் செய்யும் நடிகர்களையோ அல்லது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்பிக்களைச் சுற்றித் திரியும் எங்களைப் போல் செய்தியாளர்களின் செயலை நியாயப்படுத்துவதற்கான பதிவு இது இல்லை.
பார்வையாளர்களுக்கு எது முக்கியம் என நாங்கள் நம்புவதையே நீங்களும் விரும்பி பார்க்கிறீர்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது. எனினும், இந்த முறை, செய்தியாளர்கள் உங்களிடம் ஒரு கருத்தைக் கூற முயற்சி செய்துள்ளனர். வாக்களிப்பது உங்கள் உரிமை என்பதே அந்த செய்தி.
நம்புவீர்களோ இல்லையோ, ஒவ்வொரு வாக்கும் முக்கியம். நான் வாக்களித்துவிட்டேன். நீங்களும் வாக்களிப்பீர்கள் என நம்புகிறேன்.
