விவசாயம் பழகலாம் வாங்க: ஆன்லைன் மூலம் இளைஞர்களிடம் ஆர்கானிக் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் தம்பதி..!
My Harvest என்ற பெயரில் ஆர்கானிக் விவசாயம் செய்து வரும் அர்ச்சனா ஸ்டாலின், புதுமையான முறையில் ஆன்லைனில் விவசாயத்தை சென்று சேர்க்கிறார்.
ஆர்கானிக் என்ற சொல் கடந்த சில ஆண்டுகளாகவே நம்மைச் சுற்றி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆர்கானிக் என்றால் விலை அதிகம் என்பதை தாண்டி யாரும் அதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. சாலைகளில் பல கடைகளில் ஆர்கானிக் காய்கறிகள், ஆர்கானிக் பொருட்கள் என்ற வார்த்தையை படித்து விட்டு கடந்திருப்போம். ஆனால், அந்த ஆர்கானிக் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை பிறருக்கு புரிய வைக்க வேண்டும் என்ற முயற்சியில் களமிறங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார் தன்னுடன் பொறியியல் கல்லூரியில் படித்த ஸ்டாலின் என்பவரை திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டில் ஆன அர்ச்சனாவுக்கு கிராமப்புற சூழல்கள் தான் நிம்மதியை தந்துள்ளது.
ஒருமுறை கணவருக்கு உடல்நிலன் சரியில்லாத போது தான், ஏன் நாம் உண்ணும் உணவை நாமே உற்பத்தி செய்யக்கூடாது என்ற எண்ணம் தோற்றியுள்ளது. அந்த எண்ணம் தான் இன்று பல இளைய தலைமுறை விவசாயிகளை உருவாக்க உறுதுணையாக அமைந்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தன் வீட்டு மாடியில் மட்டும் மாடித்தோட்டம் அமைத்துள்ளார். அதன்பிறகு காய்கறிகளை எப்படி செயற்கை பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் வளர்ப்பது என்பதை கற்றுக்கொண்டு தன் குடும்பத்தினருக்கு மட்டும் மாடித்தோட்டம் அமைத்து கொடுத்துள்ளார். கைநிறைய வருமானம் கொடுத்த வேலை தனது கனவுக்காக விட்டுவிட்டு முழு நேரமாக விவசாயம் கற்றுக்கொள்ள கிராமப்புறங்களை நோக்கி பயணித்துள்ளார். அவர் கிராமம் ஒன்றில் சில வாரங்கள் தங்கி, இயற்கை விவசாயம் செய்வது பற்றி செயல்முறையில் கற்றுக்கொண்டுள்ளார். முதலில் அங்கு கீரை வகைகள், தர்பூசணி போன்றவற்றை வளர்த்து விற்பனை செய்துள்ளார். அப்போது தான் விவசாயிகள் படும் கஷ்டம் அவரை மேலும் யோசிக்க வைத்துள்ளது. மாதம் முழுவதும் கடினமாக வேலை செய்தாலும், மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைப்பதே கஷ்டம் என்ற சூழலை புரிந்து கொண்டுள்ளார். விவசாயிகள் பலரும் தங்கள் அடுத்த தலைமுறை விவசாயம் செய்வதை ஊக்குவிப்பதில்லை. காரணம் அதில் இருக்கும் சிக்கல்களும், சவால்களும் தான். கிராமங்களில் விவசாயத்தை நேரடியாக கற்றுக்கொண்ட அர்ச்சனா அதன்பிறகு முதலில் மாடித்தோட்டம் தான் அமைத்துக் கொடுத்து வந்தார். அடுத்தகட்டம் செல்ல நினைத்த அவர் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும் வகையில் ஒரு யோசனை செய்தார்.
அதுதான் சென்னைவாசிகளும் விவசாயம் செய்யலாம் என்பது. திருவள்ளூர், திண்டிவனம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்த விவசாயிகளை ஒருங்கிணைத்து சென்னையில் வசிக்கும் மக்கள் விவசாயம் செய்ய ஏற்பாடு செய்தார். இந்த வித்தியாசமான முயற்சிக்கு சென்னைவாசிகளும் ஆதரவு கொடுத்தனர். இயந்திரங்களுக்கு நடுவே வாரம் முழுவதும் வாழ்ந்து விட்டு, வார இறுதி நாளில் விவசாயம் செய்ய இந்த நிலங்களுக்கு சென்றுவிடுவார்கள். அங்கே அவர்கள் விரும்பும் காய்கறிகளை அவர்களே விதைத்து, வளர்த்து, அறுவடையும் செய்து கொள்ளலாம். எப்போது வேண்டும் என்றாலும் அங்கே சென்று பார்க்கலாம். பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா வயலில் இறங்கி வேலை செய்து இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறினார்.

இதுகுறித்து பேசிய அர்ச்சனா, “சென்னையில் விவசாயம் சார்ந்த எந்த வேலைகளுமே தெரியாத மக்கள் பலரும், இந்த முறையில் விவசாயம் பழகினர். கடைகளில் ஆர்கானிக் முறையில் எந்த பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தாமல் வளர்க்கப்பட்டதா என்பதை தெரியாமல் வாங்கிய நிலை மாறி, கண்முன்னே காய்கறிகளை வளர்த்து அதனை சாப்பிட சிலர் ஆர்வம் காட்டினர். கரோனா சமயத்தில் யாரும் வெளியே வரமுடியாத சூழலில், குழுக்களாக செயல்பட்டு வீட்டுக்கே சென்று காய்கறிகளை வழங்கி வருகிறோம். இதுவரை 1,400 குடும்பங்கள் அவர்களே விவசாயம் செய்து, அவர்களுக்கான காய்கறிகளை வளர்க்க செய்துள்ளோம். எங்கள் குழுவில் 70 விவசாயிகள் இருக்கிறார்கள். அதில் 26, 27 வயதில் நிறைய பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஆரம்பத்தில் விவசாயத்தில் இறங்க தயக்கம் காட்டினர். ஆனால் இப்போது ஆர்வமுடன் வயலில் இறங்கி வேலை செய்து மாதம் 18 ஆயிரம் வரை வருமானம் பெறுகிறார்கள். நாங்கள் நாட்டுக்கோழி, முட்டை, காய்கறிகள் எல்லாம் வளர்க்கிறோம்.
இப்போது ஆர்கானிக் விவசாயத்தை வீட்டில் இருப்பதால், லாக்டவுன் சமயத்தில் பலரும் கற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். இவர்களுக்காக ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க யோசித்தேன். கடந்த வாரம் தான் முதலின் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் மாலை நேரம் விவசாயம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து வகுப்பு எடுக்கிறேன். விவசாய இடம் வாங்குவது முதல் எந்த காய்கறிகளை விதைப்பது, இயற்கை உரம் என அனைத்தைப் பற்றியும் கற்றுக்கொடுக்கிறேன். சிலர் பல லட்சம் செலவு செய்து நிலம் வாங்கி, அதில் லாபம் மட்டுமே நோக்கம் என நினைத்து விவசாயம் செய்கிறார்கள்.

சில மாதங்களில் நஷ்டம் ஏற்பட்டு விவசாயம் வேண்டாம் என ஒதுங்குகிறார்கள். உண்மையில் விவசாயம் முறைப்படி செய்தால் லாபம் தான். அதனால் பிசினஸ் செய்ய நினைப்பவர்கள் விவசாயத்தையும் கையில் எடுக்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறேன். கடந்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்பில் 60 பேர் இணைந்தார்கள். அதன் தொடர்ச்சியாக பலர் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனால் இந்த வாரமும் நாளையும், நாளை மறுநாளும் ஆன்லைன் வகுப்புகள் நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வகுப்புகள் எடுக்கிறேன். இளம் தலைமுறையினர் விவசாயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் என் நோக்கம்.” என்று சொல்லி முடித்தார்.

இளம் தலைமுறை விவசாயிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அர்ச்சனா ஸ்டாலினின் இந்த முயற்சி பாராட்டுதலுக்கு உரியது. அர்ச்சனா போல நாமும் ஒரு நல்ல தொடக்கத்தை தொடங்க தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை உதவுகிறது.
மார்க்கெட்டில் நாம் வாங்கி வரும் காய்கறிகள் உண்மையில் உடலுக்கு நன்மைதானா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டால் அதற்காக பதில் நிச்சயம் இல்லை என்பதுதான். பூச்சி மருந்துகள் இல்லாமல் காய்கறி விவசாயம் இல்லை என்பதே நிதர்சனம். அதன்பின் வியாபாரிகள் அதை வாங்கி மார்கெட்டுகளுக்கு அனும்பி வைக்கின்றனர். மரபணு மாற்றப்பட்ட விதையில் உருவான காய்கறியா அல்லது பூச்சி மருந்துகள் அதிகம் தெளிக்கப்பட்ட காய்கறியா என்ற குழப்பத்துடனே வாங்கி உண்கிறோம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு நமக்கு தேவையான அடிப்படை காய்கறிகளை நாமே வீட்டில் வளர்ப்பது.
மாடித்தோட்டம் அமைப்பதற்கு பெரிய இடமோ, அதிக பணமோ தேவையில்லை. வீட்டின் பால்கனியில் கூட தேவையான சில காய்கறிகளை வளர்க்கலாம். மாடியில் இடம் இருந்தால் குறைந்த செலவில் மாடித்தோட்டம் அமைத்துவிடலாம். ஆரம்பத்தில் அனைத்துக் காய்கறிகளையும் வளர்க்க நினைக்க கூடாது.

தமிழக அரசு தோட்டக்கலைத் துறை மூலமாக, மானிய விலையில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான கிட் வழங்கி வருகிறது. 10 வகையான காய்கறி விதைகள், 6 குரோ பேக்ஸ், நுண்ணுயிர் உரம், வேம்பு பூச்சிக் கொல்லி, தேங்காய் நார்க் கழிவு, மாடித்தோட்டம் அமைப்பதற்கான கையேடு அடங்கிய கிட் உள்ளிட்டவை வெறும் 325 ரூபாய்க்கு கிடைக்கிறது. வீட்டின் அருகேயுள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்திற்கு சென்று இதனை ஆதார் அட்டையைக் காட்டி பெற்றுக்கொள்ளலாம். குரோ பேக் கிட் 6,12,18 எண்ணிக்கையில் கிடைக்கும். எண்ணிக்கைக்கு ஏற்ப விலை அதிகரிக்கும். அதே போல வெயிலில் இருந்து செடிகளை பாதுகாக்க அமைக்கப்படும் பசுமைக்குடிலுக்கு இங்கே 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மாடித்தோட்டம் அமைக்க யூடியூப்பில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. அதை எல்லாம் பார்த்து குழம்ப கூடாது. 6 குரோ பேக்கிலும் தனித்தனியாக 2 கிலோ தேங்காய் நார்க் கழிவு கேக் வடிவில் இருக்கும். பேக்கை பிரித்து அதில் அப்படியே தண்ணீர் ஊற்றி 1 நாள் விட்டுவிடுங்கள். தேங்காய் நார் நன்றாக ஊறி, பாதி அளவுக்கு பை நிறைந்திருக்கும். அதன் மேல் தேவையான அளவு மண் கொட்டி நன்றாக கலக்கலாம். 6 குரோ பேக்கிலும் ஊறியுள்ள தேங்காய் நாரை மொத்தமாக ஓர் இடத்தில் கொட்டி அதனுடன் செம்மண், நுண்ணுயிர் உரம் கொட்டி நன்றாக கலந்து பின் எல்லா பேக்கிலும் அதை நிரப்பலாம்.
முள்ளங்கி, அவரை, பீன்ஸ், வெண்டைக்காய், பாலக் கீரை, கொத்தமல்லி விதைகளை அப்படியே அதன் மீது தூவி தினமும் தண்ணீர் ஊற்றி வரலாம். தக்காளி, கத்திரி, பச்சை மிளகாய் போன்ற விதைகளை நாற்று விட்டு சில வாரங்கள் கழித்த பின்னரே குரோ பேக்கிற்கு மாற்ற வேண்டும். செடிகளுக்கு தேவையான உரத்தை அரசே குப்பைகளில் இருந்து தயாரித்து கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. வெர்மி கம்போஸ்டை வாரம் ஒரு கை அளவு செடிகளுக்கு உரமாக கொடுக்கலாம். வெயில் படும்படி வைத்து வளர்க்க வேண்டும்.

Related Stories
உலக சுகாதார தினம் 2020: ஆரோக்கியமாக வாழ 5 ரகசியங்கள்! இன்றே தெரிந்து கொள்ளுங்கள்!
'ஸ்கின் ஃபாஸ்டிங்’ செய்ய இதுதான் சரியான நேரம்! உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் அழகு ரகசியம்! #Quarantinetimes
குழந்தைகளுக்கும் ஆன்லைன் தேர்வுகள்! மன உளைச்சலில் பெற்றோர்! கழுத்தை நெறிக்கும் லாக்டவுன் கல்வி முறை!
தேர்தலுக்கு தயாராகும் திமுக: திருவொற்றியூர் தொகுதி கள நிலவரம் இதோ! கரோனா பணி முதல் கட்சி பணி வரை!