'கரோனா தடுப்பு மருந்து மீது மக்களுக்குத் தயக்கம் ஏற்பட முக்கிய காரணம் அரசே!' | இரண்டாம் அலை...
“ இரண்டாவது முறை மருந்து எடுத்துக்கொண்ட 14வது நாளிலிருந்துதான் முழுமையான பாதுகாப்பு ஏற்படும். எனவே அதற்கு இடையில் என்ன அறிகுறிகள் ஏற்பட்டாலும் மக்கள் உடனடி நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்”
கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் திட்டமிட்டிருந்தேன். அதன்படி, நண்பர் ஒருவரின் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளப் பெயரைப் பதிவு செய்தேன். மருத்துவமனை தரப்பில், covishield மருந்து செலுத்தப்படும் என்றனர். அவர்கள் குறிப்பிட்டபடி, 250 கட்டணம் செலுத்திவிட்டுக் காத்திருந்தேன்.
20 பேர் ஏற்கனவே பெயர்களைப் பதிவு செய்துவிட்டுக் காத்திருந்தனர். பெரும்பாலானோர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள். யாரும் எந்த பதற்றமும் இல்லாமலே இருந்தனர்.
அப்போது, அங்கிருக்கும் ஊழியர்களுக்கு அழைப்புகள் வந்துகொண்டிருந்தது. எதிர்முனையில், என்ன மருந்து செலுத்துகிறீர்கள் என்று கேள்வி கேட்பதாகவே தெரிகிறது. இங்கிருந்த ஊழியர்கள் “Covishield மருந்து செலுத்துகிறோம். காவல்துறை, மருத்துவ பணியாளர்கள், ஊடக பணியாளர்கள் தவிர 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் செலுத்தப்படும்” என்ற பதிலே குறிப்பிட்டனர். இதுபோன்று, என்ன மருத்து செலுத்தப்படுகிறது, என்று கேட்டு பலரும் அழைத்திருந்தனர், “Covishield” என்றதும், ஏன் Covaxin செலுத்துவதில்லை என்பது போன்ற கேள்வி முன்வைப்பதாகத் தெரிந்தது. இவ்வாறு பல அழைப்புகளும், நேரடியாக வந்து கேட்பவர்களும், அதற்கு மருத்துவ பணியாளர்கள் பதில் கூறுவதுமாகவே இருந்தது.

சரியாக காலை 10 மணி அளவில், தடுப்பூசி செலுத்தத் துவங்கினர். எனக்கு முன் பலரும் எடுத்துக்கொண்டனர். என்னுடைய முறை வந்ததும் உள்ளே சென்றேன். இடது கையில் தான் ஊசி செலுத்தப்படும் என்று அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள் குறிப்பிட்டனர். பெயர், முகவரி, நீண்ட கால உடல் பிரச்சனைகள் குறித்துப் பதிவு செய்தபின், Covishield-யை செலுத்தினர். ஒரு பஞ்சில், சொலூசன் வைத்து கையில் வைத்தனர். “இதில், எந்த அழுத்தமும் கொடுக்கக் கூடாது, குளிர்ச்சியாகவோ, சூடாகவோ ஒத்தணம் கொடுக்கக் கூடாது. காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், Dolo 650 மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றனர்.
வெளியில் 30 நிமிடம் காத்திருக்கும்படி கூறினர். அந்நேரத்தில், மருந்து எடுத்துக்கொண்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. எனக்கு உடலில் எந்த வித அசாதாரண உணர்வும் தோன்றவில்லை. சற்று குளிர்வதுபோன்று இருந்தது, அது வெறும் 5 நிமிடத்திற்கு மட்டும். அதன்பின் எந்த மாற்றமும் தெரியவில்லை.
அன்று மாலையிலிருந்து, கிட்டத்தட்ட 48 மணிநேரம் கடுமையான கை வலியும், அவ்வப்போது லேசான காய்ச்சலும் இருந்தது. அதற்கு மாத்திரை எடுத்துக்கொண்டேன். அத்துடன் கடும் பசியும் இருந்தது. 48 மணிநேரத்திற்கு பின் வலி குறைந்துவிட்டது.

ஒரு தடுப்பூசி எடுத்துக்கொண்டால் உடல் பிரச்சனை ஏற்படும் என்று பலரும் எனக்குக் கூறினர். மருந்து எடுப்பதற்காக நான் புறப்படும் போது கூட, “உடல் முழுக்க புண் ஏற்படும், தலைவலி, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்” என்று தோழி ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், குழந்தைகளுக்குப் போடும் தடுப்பூசிக்குப் பின், அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்படுவதைப் போன்ற உணர்வே எனக்கும் இருந்தது.
மக்கள் மத்தியில் Covaxin-யை விட Covishield மீது அதிக அச்சம் இருக்கிறது என்பது நான் மருந்தை எடுத்துக்கொண்டதன் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.
Covaxin தயாரிப்பு நிறுவனத்தின் தளத்தில், மருந்தின் விவரங்கள் பற்றி தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த மருந்து பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் ICMR-ஆல் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், Whole-Virion Inactivated Vero Cell முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் உள்ள விவரங்கள் காட்டுகின்றன.
Covaccine மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு,
- மருந்து செலுத்தப்பட்ட இடத்தில் வலி, வீக்கம், சிவத்தல், அரிப்பு
- தலைவலி
- காய்ச்சல்
- உடல்நலக்குறைவு, உடல் வலி
- வாந்தி
- தடித்தல்” போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்து covishield. இம்மருந்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் செலுத்தப்படுகிறது.
Covishield எடுத்துக்கொள்பவர்களில்,
- உடல்வலி, சிவத்தல், அரிப்பு, வீக்கம்
- சேர்வு
- குளிர் மற்றும் காய்ச்சல்
- தலைவலி
- மூட்டு மற்றும் தலை வலி
இரு மருந்து எடுத்துக்கொண்டாலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படும் என்பதை இந்த விவரங்கள் காட்டுகின்றன. இது குறித்து மருத்துவர் சாந்தி ரவிந்திரநாத் அவர்களிடம் கேட்டபோது, “Covishield எடுத்துக்கொள்ளப் பெரும்பாலானோர் விரும்பவில்லை என்பது சமீபத்திய நிகழ்வுகள் தான். ஆரம்பத்தில் Covaxin-னின் phase-3 வெளியாகத் தாமதமானதால் அதை எடுத்துக்கொள்ள அச்சம் இருந்தது. பல மருத்துவர்கள், மருத்துவ சங்கங்கள் Covaxin எடுத்துக்கொள்ள வேண்டாம், covishield எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கினர்.
தற்போது Covaxin-னின் phase-3 அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் 81 சதவீதம் பலனளிப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Covaxin-னின் உருவாக்கம் என்பது வைரசின் வீரியத்தைக் குறைப்பதாக இருக்கிறது. இந்த முறையில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் பல தற்போது, பயன்பாட்டில் உள்ளன.
Covishield, அடினோ வைரஸ் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது புதிய முறை. இதுபற்றி வாட்ஸ்ஆப், தடுப்பு மருந்து பற்றிய விஷயங்கள் தெரிந்தவர்களிடையே அதிக அளவில் கேள்வி எழுகிறது.
பொதுவாகப் பார்த்தால் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள மக்களிடையே தயக்கம் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் அரசு தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்திய விதம் மற்றும் அரசின் சில நடவடிக்கைகள். உதாரணமாக கரோனா தொற்றின் அறிவியலை விளக்காமல், கை தட்டுவது, கோ கரோனா என்று கத்துவது, விளக்கு ஏற்றுவது போன்ற செயல்பாடுகளை அரசு செய்து வந்தது.
அதன்பின், ஆகஸ்ட் 15-ம் தேதி மருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது, அரசியலாக்கப்பட்ட நிகழ்வாகவே பார்க்கமுடிந்தது. அதில் அறிவியல்பூர்வமான விஷயங்கள் எதுவும் இல்லை.

ஜனவரி மாதத்தில், தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியபோது மருத்துவர்கள் மத்தியிலேயே தயக்கம் இருந்தது. மற்ற தடுப்பு மருந்துகளைவிட, கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள மருத்துவர்களிடையே அச்சம் இருந்தது.
Covishield மருந்து அதிக அளவில் தயாரிக்கும் வாய்ப்பு உள்ளது. Covaxin அந்த அளவு உருவாக்கும் திறன் இல்லை. இரண்டு மருந்துகளும் பாதுகாப்பானவை. இந்த மருந்தை மட்டும்தான் எடுத்துக்கொள்வேன் என்று மக்கள் நினைக்காமல், தற்போது கிடைக்கக்கூடிய தடுப்பூசியை எடுத்துக்கொண்டால் கரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த முடியும்.
இரண்டாவது அலையில், கரோனா வைரஸின் திரிபு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த நேரத்தில் கிடைக்கும் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த தடுப்பு மருந்துகள், அனைவருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் என்று கூறமுடியாது. பொதுவாக இரண்டு தடுப்பு மருந்திற்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்கும். ஆனால் அனைவருக்கும் அந்த அறிகுறிகள் வெளிப்படவேண்டும் என்று அவசியம் இல்லை. தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்படலாம்.
தடுப்பு மருந்தால் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் என்றால், ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்குள் சிறிய அளவில் அறிகுறிகள் தெரியும். நேரம் செல்ல, செல்ல அது அதிகமாகிவிடாது.
முதல் முறை மருந்தை எடுத்துக்கொண்டதும், முழுமையாகப் பாதுகாப்பு வந்துவிடாது. எனவே அவர்களுக்கு மருந்து போட்டபின்னரும் கரோனா தொற்று ஏற்படலாம். மருந்து எடுத்துக்கொண்ட மூன்று நாட்களுக்கு மேல் அறிகுறிகள் தென்பட்டால், அது மருந்தினால் ஏற்பட்டது என்று நினைத்து இருந்துவிடக் கூடாது. பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இரண்டாவது முறை மருந்து எடுத்துக்கொண்ட 14வது நாளிலிருந்துதான் முழுமையான பாதுகாப்பு ஏற்படும். எனவே அதற்கு இடையில் என்ன அறிகுறிகள் ஏற்பட்டாலும் மக்கள் உடனடி அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
