"அம்மா இருந்தாங்க, செழிப்பா செஞ்சாங்க!”- எங்களின் டீ பிரேக்
ஓட்டு போட்டுதானா ஆகனும். இல்லனா ஓட்டர் ஐடில இருந்து பேர தூக்கிடுவாங்களே. அதனால ஊருக்கு ஓட்டுப் போட போவனும். ஆனா ஓட்டு யாருக்கு போடுறதுனுதான் ஒன்னுமே புரியல. முன்ன அம்மா இருந்தாங்க, நல்லா செழிப்பா செஞ்சாங்க, அவங்களுக்கு ஓட்டு போட்டோம். இப்ப அவங்க இல்லையே.
வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதனால் பழச்சாறு குடிப்பதற்காக நானும் அபிஷாவும் கடைத் தெருவிற்குச் சென்றுகொண்டிருந்தோம். போகும் வழியில் கடும் வெயிலில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி இளநீர் வண்டியை தள்ளிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். அந்த பெண்மணியைப் பார்த்ததும் பழச்சாறு குடிக்கும் பிளானை கட் செய்துவிட்டு இளநீர் குடிக்கலாம் என்று அந்த பெண்மணியை ஒரு மரத்தின் நிழலில் நிற்கவைத்தோம். ரெண்டு இளநீர் கொடுங்கம்மா. ஒரு இளநீர் எவ்வளவு? என்று கேட்டேன். 35 ரூபாயிலும் இருக்கு… 40 ரூபாயிலும் இருக்கு.. என்று அவர் சொன்னார். சரி ரெண்டு இளநீர் கொடுங்க. இவ்வளவு வெயிலுல இளநீர் விற்கிறீர்களே! என்று நான் கேட்டபோது, “ இப்ப வித்தாதான எளநீர் விக்கும். தரமணி ரயில்வே மேம்பாலத்துல இருந்து ஓஎம்ஆர் வரைக்கும் இந்த வண்டிய இழுத்துகிட்டுதான் போய்ட்டு வரேன். இந்த வண்டிய தள்ளுனாதான் சாப்பாடு. தள்ளுலனா சாப்பாடு ஏது? ” என்றார்.
பேசும்போது அவரின் பெயர் பருவதம்மா என்று தெரியவந்தது. மேலும் பேச தொடங்கிய பருவதம்மா, “இத வித்தாதான் ஒரு நாளைக்கு 300 ரூபாயில இருந்து 400 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். சில நேரங்கல அம்புட்டும் வித்துடும், சில நேரங்கல விக்காது. ஒரு காய்க்கு 2 ரூபாய் கிடைக்கிது. எப்போவாது 5 ரூபாய் கிடைக்கிது.

இதுக்கு முன்னாடி நான் சித்தாள் வேலை செஞ்சிட்டு இருந்தேன். வயசு ஆகிட்டதுனால படிகட்டுலாம் ஏற முடியல. அதனால இப்போ எளநீர் வியாபாரம் பாக்குறேன். வெயில் சீசன் முடிஞ்சதும் பூ விக்கிறேன். எங்க வீட்டுகாரரு பெரிய ஆளு வேல செய்றாரு” என்று சொன்னார். பெரிய ஆள் வேலைனா என்னம்மா என்று கேட்டபோது, “அப்படினா கலவை கலக்குற வேலை (சிமெண்ட் கலவை). எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சி. ஒரு பையன். அவன் இப்போதான் 12-வது முடிச்சான். சம்பாதிக்கிற காசு வீட்டு வாடகை கட்டவே சரியா போயிடுது. வீட்டுக்கு கரண்ட் பில்லோட ஐயாயிரத்து சில்லற வாடகை கட்டுறேன்” என்று சொல்லிகொண்டு இருக்கும்போது வர தேர்தல்ல ஓட்டு போடுவீங்களானு அபிஷா கேட்டாங்க.
“ஓட்டு போட்டுதானா ஆகனும். இல்லனா ஓட்டர் ஐடில இருந்து பேர தூக்கிடுவாங்களே. அதனால ஊருக்கு ஓட்டுப் போட போவனும். ஆனா ஓட்டு யாருக்கு போடுறதுனுதான் ஒன்னுமே புரியல. முன்ன அம்மா இருந்தாங்க, நல்லா செழிப்பா செஞ்சாங்க, அவங்களுக்கு ஓட்டு போட்டோம். இப்ப அவங்க இல்லையே.

அம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா அவங்க மக்களுக்கு அந்த அளவுக்கு செஞ்சிருக்காங்க. நம்மலாட்டும் அவங்களும் ஒரு பொண்ணுதானே. அவங்க ஒரு பொண்ணு அப்டிகுங்றதுனால மட்டும் அவங்கள பிடிக்கும்னு இல்ல. அவங்க செஞ்ச சேவையினாலையும் அவங்கள பிடிக்கும். மக்களுக்கு சைக்கிள், லேப்டாப்னு எல்லாமே கொடுத்துருக்காங்க. ஊர் மக்கள் எல்லோருக்கும் நல்லது செஞ்சாங்க. அவங்கள அவ்வளோ பிடிக்கும் (கையை விரித்து காட்டினார்). எங்க வீட்டுக் காரருக்கும் அம்மாவதான் பிடிக்கும் (சிரிக்கிறார்). அம்மா இல்லாததால கட்சி எப்படி வருமோனு தெரியல. அம்மா செத்தபோ எங்க வீட்டுல ஒருத்தரு செத்தா எவ்வளவு துக்கமா இருக்குமோ அந்த அளவுக்குத் துக்கமா இருந்தது. அன்னைக்கு சமைக்காம கொள்ளாம அழுதுட்டு இருந்தேன். சாப்ட கூட இல்ல.
ஆனா இப்போ ஏழ மக்கள ஏமாத்துராங்களே தவிர ஒன்னும் செய்றது கிடையாது. அதனால இந்த தடவ எந்த கட்சி ஜெயிக்கும்னு சொல்ல முடியாது.

ஏழ, பாளைங்க கீழ விழுந்து செத்துகிடாந்தா கூட திரும்பிப் பார்க்க மாட்டாங்க. இங்கலாம் சொந்த வீடு இருக்குறவங்களுக்கு, வசதி வாய்ப்பு இருக்குறவங்களுக்குதான் செய்றாங்க. ஏழ பட்டவங்களுக்கு எல்லாம் ஒன்னும் செய்றது இல்ல. கஷ்டபட்டவங்க கஷ்டபட்டுக்கிட்டேதான் இருக்கோம்” என்றார்.
கரோனா காலத்துல என்ன பண்ணிட்டு இருந்தீங்க....?
“அப்போ நாங்க ஊருக்கு போய்ட்டோம். அங்க சாப்பாட்டுக்குக் கூட இல்லாம கஷ்டம்தான் பட்டோம், வேற என்ன பண்றது.”
இளநீர் விக்கிற இடத்துல எதும் பிரச்சனை…? “அதுலாம் இதுவரைக்கும் ஒன்னும் இல்ல. யாரவது மெரட்டுனா போன் பண்ணுங்கனு போலீஸ் காரங்க என்கிட்ட வந்து சொல்லுவாங்க.. மத்தப்படி எந்த பிரச்சனையும் இல்லை” என்று சொன்னார் பருவதம்மா.
நாங்களும் குடித்த இளநீருக்குக் காசைக் கொடுத்துவிட்டு அலுவலகம் வந்து சேர்ந்தோம்.
